வீடு வீடாக சென்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டார்.
பாஜக தலைமையிலான ஆளும் மத்திய அரசு கடந்த மாதம் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனை அடுத்து தலைநகர் டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போரட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து, இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.
அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தை கையிலெடுத்தனர். பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே சில தினங்களுக்கு முன்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் போராட்டத்தை சமாளிக்கும் வகையில் சிஏஏ மற்றும் என்.ஆர்.சிக்கு ஆதரவாகவும் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அத்துடன், மூன்று கோடி குடும்பங்களை சந்தித்து இந்தச் சட்டம் குறித்து விளக்கம் அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான அன்ல் ஜெயின், ஜனவரி 5ஆம் தேதி முதல் பாஜக தலைவர்கள் வீடுவீடாக சென்று விளக்கம் அளிக்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பாஜக தேசிய செயல்தலைவர் ஜே பி நட்டா, காசியாபாத்திலுள்ள வைஷாலியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதேபோல் தலைநகர் டெல்லியில் லஜ்பத் நகரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இதே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதையொட்டி மாநிலம் முழுவதும் பாஜக மூத்த தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.