இந்தியா

தண்ணீர் நிரப்பிய டம்ளர்... ரயிலின் சொகுசு பயணத்தை உறுதி செய்த அமைச்சர்..!

JustinDurai

ரயில் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு துளி தண்ணீர் கூட டம்ளரிலிருந்து சிதறவில்லை.

சமீபத்தில் பெங்களூரு - மைசூரு ரயில் பாதையில் ரூ.40 கோடி செலவில் 130 கி.மீ தூரத்திற்கு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இப்பாதையில் ரயில் பயணம் சொகுசாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக ரயில்வே அதிகாரிகள் ஒரு எளிமையான சோதனையை செய்தனர்.  

அதாவது ஒரு கண்ணாடி டம்ளரில் ததும்பும் அளவுக்கு தண்ணீர் நிரப்பி ஒரு ஓடும் ரயிலில் ஒரு மேஜையின் மேல் வைக்கப்பட்டது. ரயில் மொத்த தூரத்தையும் அதிவேகமாக கடந்து பயணித்தது. ஆனால் ஒரு துளி தண்ணீர் கூட டம்ளரிலிருந்து சிதறவில்லை.

மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘’பெங்களூரு மற்றும் மைசூரு இடையே ரயில் பாதையில் மேற்கொள்ளப்பட்ட  பராமரிப்புப் பணிகளின் முடிவுகளை பாருங்கள்’’ என பதிவிட்டுள்ளார்.