ஜம்மு-காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி காரில் சென்ற போது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஸ்ரீநகரில் உள்ள பிரஸ் காலணி அலுவலகத்திற்கு வெளியே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுஜாத் தன்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கும் போது அடையாளம் தெரியாத மறைந்திருந்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் ஆசிரியரான சுஜாத் புஹாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சுஜாத்தின் பாதுகாலர்கள் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘ரம்ஜானுக்கு முதல்நாளில் பயங்கரவாதம் தனது கொடூர முகத்தை காட்டியுள்ளது’ என்று அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மெகபூபா வலியுறுத்தினார்.