உத்தரபிரதேசம் சீதாபூர் மாவட்டத்தில் ராகவேந்திர பாஜ்பாய் என்ற பத்திரிகையாளர் ஒருவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்பு மற்றும் தோள்பட்டையில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகளால் படுகாயம் அடைந்த பத்திரிக்கையாளர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக தகவல்கள் சொல்கின்றன.
உத்தரபிரதேசம் சீதாபூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் (NH-30) தன்னுடைய இருசக்கரவாகனத்தில் ராகவேந்திர பாஜ்பாய் என்ற பத்திரிகையாளர் அவருடைய வீட்டிற்கு சென்றுகொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது அவருடைய பைக்கை மற்றொரு வாகனம் ஒன்று மோதியுள்ளது, அந்த தருணத்தில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
படுகாயமடைந்த பத்திரிகையாளர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாகவும், அவருக்கு மார்பு மற்றும் தோள்பட்டையில் துப்பாக்கியால் ஆன காயங்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இச்சம்பம் குறித்து பேசியிருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர், "பிற்பகல் 3.15 மணியளவில், தேசிய நெடுஞ்சாலையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும் (ஆர்.டி.ஐ) பத்திரிகையாளருமான ராகவேந்திர பாஜ்பாய் கொலை செய்யப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. கொலை சார்ந்து நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து அதன்மூலம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.
கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பட்டப்பகலில் நடத்தப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.