இந்தியா

உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை! 9 பேர் கைது

sharpana

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் நடுரோட்டில் சுடப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உள்ளூர் நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் விக்ரம் ஜோஷி கடந்த 20 ஆம் தேதி தனது மகள்களுடன் விஜய் நகரிலுள்ள அவரது வீட்டிற்கு பைக்கில் செல்லும்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால்  சுடப்பட்டார். தங்கள் கண்முன்னே தந்தை சுடப்பட்டு வீழ்வதைப் பார்த்து செய்வதறியாமல் கதறித்துடித்தனர். பின்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துவந்த விக்ரம் ஜோஷி இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இச்சம்பவம், பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி குண்டு பாய்ந்த காயம் விக்ரம் ஜோஷியின் தலையின் நரம்புகளில் மிகவும் மோசமான சேதத்தை ஏற்படுத்திவிட்டது என்று மருத்துவர்கள் கூறினர்.

 விக்ரம் ஜோஷி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 16 ஆம் தேதி விக்ரம் ஜோஷியின் மருமகளை சில நபர்கள் கிண்டல் செய்துள்ளனர்.  அதுகுறித்து  விக்ரம் ஜோஷி காவல் நிலையத்தில் புகார் அளித்து, அவர்கள்மீது வழக்கும் பதியப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

காசியாபாத்தின் மூத்த காவல் அதிகாரி கலாநிதி நைதானி “இந்த கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட ரவி மற்றும் சோட்டு ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது” என்றார். ஆனால், ”முக்கிய குற்றவாளி பிடிபடும்வரை நாங்கள் மாமாவின் உடலை வாங்கமாட்டோம்” என்று, உயிரிழந்த விக்ரம் ஜோஷியின் மருமகள்  தெரிவித்துள்ளார்.

இதனை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, யோகி ஆதித்யநாத் அரசை “குண்டர்களின் ஆட்சி” என்றும், உ.பியின் முன்னாள் முதல்வர் மாயவதி குற்றங்களின் வைரஸ் பரவுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தார்.