இந்தியா

பத்திரிகையாளர் சுட்டுக்கொலை: விசாரணைக்கு உத்தரவிட்டார் யோகி ஆதித்யநாத்

webteam

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக, உடனடி விசாரணை நடத்துமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

கான்பூர் பில்ஹார் பகுதியைச் சேர்ந்த நவீன் ஸ்ரீவத்சவா என்ற பத்திரிகையாளர், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத சில நபர்களாக நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், இந்தி தனியார் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வருகிறார். பட்டபகலில் நவீன் மர்ம நபர்களால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்த பத்திரிகையாளர் நவீன் ஸ்ரீவத்சவா குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இதுக் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் கொலைச் செய்யப்படுவது அடிக்கடி நிகழ்வதாக மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் நாட்டிலேயே குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.