ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள நிலையில், சோனியா காந்தி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கிய நிலையில், முதலமைச்சர் கமல்நாத் அமைச்சரவையை மாற்றி அமைக்க வசதியாக 20 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் இருந்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு தனது ராஜினாமா கடிதத்தை ஜோதிராதித்ய சிந்தியா, சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். அதில் 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு உழைத்த தான் அக்கட்சியில் இருந்து விலக வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தை காங்கிரஸ் கட்சியில் இருந்தால் நிறைவேற்ற இயலாது என நம்புவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சோனியா காந்தி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே மாஃபியாக்களுக்கு எதிராக கமல்நாத் நடவடிக்கை எடுத்ததால்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது எனவும் மத்திய பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.