பவன்கல்யாண், ராம் சரண் குறித்து கிண்டல் Pt web
இந்தியா

பவன் கல்யாண், ராம் சரண் குறித்து கிண்டல்.. நகைச்சுவைக் கலைஞர் அதிரடி கைது!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் நடிகர் ராம் சரண் ஆகியோரைத் தனது நகைச்சுவை நிகழ்ச்சியில் கிண்டல் செய்ததாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் அனுதீப் கதிகாலா (30) உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Premkumar S

அனுதீப் கதிகாலா என்பவர் ஆந்திராவில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக செயல்பட்டு வருகிறார். ஐஐடி பட்டதாரியான இவர், ஹைதராபாத்தில் உள்ள 'சில்லி சவுத் காமெடி கிளப்' என்ற அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார். சமீபத்தில், அனுதீப் தனது நகைச்சுவை வீடியோ ஒன்றை அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், பவன் கல்யாணின் திருமண வாழ்க்கை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். மேலும், நடிகர் ராம் சரணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பவன் கல்யாண் மற்றும் ராம் சரண் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

அனுதீப் கதிகாலா

இது தொடர்பாக ஜனசேனா கட்சித் தொண்டர் ஒருவர் ஆந்திராவின் காக்கிநாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அனுதீப் மீது அவதூறு பரப்புதல் மற்றும் பெண்களின் கண்ணியத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரயாக்ராஜில் உள்ள தனது பெற்றோரைப் பார்க்கச் சென்றிருந்த அனுதீப்பை, ஆந்திர மாநிலக் காவல்துறையினர் அங்குள்ள ஒரு பூங்காவில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு முன்பே அனுதீப் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதில், "யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை, ஒருவேளை எனது நகைச்சுவை யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்கு மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், பவன் கல்யாணின் ரசிகர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.