இந்தியா

ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

rajakannan

ஜேஎன்யூ மாணவர் தேர்தலில், அனைத்து பதவிகளுக்கும் இடதுசாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். 

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) மாணவர் பேரவை தேர்தல் செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்றது. 67.8 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதாவது சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் வாக்களித்தனர். பதிவு முடிவடைந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியது. ஆனால், தங்களிடம் கூறாமல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதாக வாக்குச் சாவடியை ஏபிவிபி அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதனால், சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர், நேற்று மாலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.  

இந்தத் தேர்தலிலும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் ஏபிவிபி இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் இணை செயலாளர் ஆகிய அனைத்து  பதவிகளுக்கும் இடதுசாரி மாணவர் அமைப்புகளின் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தலைவர் பதவிக்கு சாய் பாலாஜி(2,161), துணைத் தலைவர் பதவிக்கு சரிகா சவுத்ரி(2,692) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், ஏஜஸ் அகமது(2423), அமுதா ஜெயதீப்(2,047) ஆகியோர் முறையே பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் பதவிகளுக்கு தேர்வாகியுள்ளனர். 

முன்னதாக டெல்லி பல்கலைக் கழகத்திற்கு நடைபெற்ற மாணவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் பதவிகளை வென்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் சங்கம் அமைப்பினர் செயலாளர் பதவிக்கும் மட்டும் வெற்றி பெற்றனர்.