டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், வகுப்புகளுக்கு திரும்ப வேண்டும் என துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்கள் இதை ஏற்காமல், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்வோம் என கூறியுள்ளனர்.
விடுதி கட்டண உயர்வை கண்டித்து, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் பல்கலைக்கழக வலைப்பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ள துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்புகளுக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டிசம்பர் 12-ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கவிருக்கும் நிலையில், மாணவர்களின் போராட்டம் அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர்கள் சிலர், பல்கலைக்கழகத்தில் உள்ள 8000 மாணவர்களில், 6000 பேர் வகுப்புகளுக்கு திரும்ப தயாராக இருப்பதாகவும், 200-க்கும் அதிகமான மாணவர்கள்தான் போராட்டத்தை தூண்டி வருவதாகவும் தெரிவித்தனர்.
இன்று குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்லவிருப்பதாக மாணவர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.