இந்தியா

கன்னையா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

rajakannan

ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமார் மீதான தேசத்துரோக வழக்கில், டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கன்னையா குமார் மாணவர் தலைவராக இருந்த போது, அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளையொட்டி ஜேஎன்யு வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 2016ம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக டெல்லி போலீசார் கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பாஜக எம்பி மஹிஷ் கிர்ரி மற்றும் ஏபிவிபி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டெல்லி போலீசார் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி இந்த வழக்கினை பதிவு செய்தனர்.

இந்நிலையில், கன்னையா குமார் உள்ளிட்டோர் மீதான வழக்கில் டெல்லி போலீசார் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகையில் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா, அகியுப் ஹுசைன், முஜீப் ஹுசைன், முனீப் ஹுசைன், உமர் குல், ரயீயா ரசூல், பஷிர் பட் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி டி.ராஜாவின் மகள் அபரஜிதா, ஜேஎன்யு மாணவர் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் ஷீலா ரஷீத் ஆகியோரின் பெயரும் 1200 பக்க குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளவர்களில் 7 பேர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். போலீசார் தரப்பில் ஆதாரங்களாக 10 வீடியோ கிளிப்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இதுகுறித்து கன்னையா குமார் கூறுகையில், “டெல்லி போலீசாருக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 3 ஆண்டுகளுக்குப்  பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தேர்தல்கள் வரவுள்ள நிலையில், இதனை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. நம் நாட்டின் நீதித்துறையை நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.