ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.கவைச் சேர்ந்த மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பு படுதோல்வி அடைந்துள்ளது.
ஜே.என்.யு. மாணவர் அமைப்பு தேர்தல் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்றது. தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர், பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலர்கள் பதவிகளுக்கான மாணவர் பிரதிநிதிகள் இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த தேர்தலில், பல்வேறு மாணவ அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியிட்டனர். அகில இந்திய மாணவர் அமைப்பு (All Indian Student Association – AISA), இந்திய மாணவர் சங்கம்(Student Federation of India - SFI) ஆகிய இடதுசாரி அமைப்புகள் ஒருங்கிணைந்த இடதுசாரிகள் கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலை சந்தித்தனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 4,639 வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கீதா குமார், சிமோன் ஸோயா கான், துக்கிரலா ஸ்ரீகிருஷ்ணா, சுபான்ஷு சிங் ஆகியோர் முறையே, தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஜே.என்.யு. தேர்தல் கமிட்டி நேற்று இரவு அறிவித்தது.
ஏபிவிபி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் கூட்டமைப்பினர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். ஜே.என்.யு. இடதுசாரி சித்தாந்தத்தின் கோட்டையாக திகழ்ந்து வருவது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.