இந்தியா

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற செக்யூரிட்டி 

webteam

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டி வேலை செய்து வந்த ஒருவர் தற்போது அதே பல்கலைக் கழகத்தில் பயில நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தின் பஜேரா கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஜல் மீனா(34). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாதுகாவலர் பணியில் சேர்ந்தார். இவர் தனது கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். எனினும் தனது குடும்ப வறுமை காரணமாக அவர் தனது படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்றார். 

இவருக்கு தற்போது திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இவர் ஜவர்ஹலால் நேரு பல்கலை கழக்கத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. எனவே பணி நேரம் முடிந்த பிறகு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயாராகியுள்ளார். அப்போது அங்கு ஏற்கெனவே பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவருக்கு உதவிக்கு வந்தனர். 

இதனைத் தொடர்ந்து அவர் பல்கலைக்கழக்கத்தின் நுழைவு தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தப் பல்கலைக் கழகத்தில் இவர் தற்போது பிஏ ரஷியன் பட்டப்படிப்பு படிக்கவுள்ளார். இது குறித்து ராம்ஜக் மீனா ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். 

அதில், “ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மிகவும் சிறப்பான பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களும் சிறப்பானவர்கள். இங்கு சமூக ரீதியிலான பாகுபாடுகள் ஏதுவுமில்லை. இங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்தனர். தற்போது நான் இங்கு படிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரே நாளில் பிரபலமானதாக நான் உணர்கிறேன்.

அன்னிய நாட்டு மொழி படித்தால் அந்த நாட்டிற்கு செல்லலாம் என்று நான் ஒரு முறை கேட்டிருக்கிறேன். எனவேதான் நான் ரஷியன் மொழி பயில திட்டமிட்டுள்ளேன். என்னுடைய குடும்பத்தில் நான் மட்டும் தான் சம்பாதித்து வருகிறேன். தற்போது பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் வேலை செய்யக்கூடாது என்ற விதியுள்ளது. ஆகவே நான் இரவு நேர வேலை செய்ய அனுமதி கோருவேன்” எனத் தெரிவித்துள்ளார்.