இந்தியா

பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் நள்ளிரவில் கைது!

பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் நள்ளிரவில் கைது!

webteam

காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் உட்பட பலர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பாகிஸ்தானி ல் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தக் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து காஷீமீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றது. 

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை திங்கள்கிழமை வரும் என கூறப்படுகிறது. இதனால் காஷ்மீரில் பதற்றம் ஏற்படலாம் என்பதால் முன் னெச்சரிக்கை நடவடிக்கையை காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் எடுத்து வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவருமான யாசின் மாலிக்கை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை சேர்ந்தவர்கள், கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறி, அந்த அமைப்பின் 12 நிர்வாகிகளையும் போலீசார் நேற்று கைது செய்துள்ள னர்.

எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.