காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தாத்தா மீது அமர்ந்து 3 வயது சிறுவன் எழுப்பும் புகைப்படம் காண்போரைக் கண்கலங்கச் செய்கிறது.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது, அந்தப் பகுதியில் மூன்றே வயது பேரனுடன் நடந்து சென்று கொண்டிருந்த 90 வயது முதியவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
நல்வாய்ப்பாகச் சிறுவன் மீது குண்டு பாயாததால் உயிர் தப்பினான். எனினும் தாத்தா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததைக் கண்டு அதிர்ந்த சிறுவன், அவர் உயிரிழந்தது தெரியாமல், உடல்மீது அமர்ந்து எழுப்ப முயற்சி செய்தான். அதேநேரத்தில் பாதுகாப்புப் படையினர் சிறுவனை மீட்டனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு மனதை உலுக்கும் வகையில் உள்ளன. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்தார்.