வரும் ஜனவரி 9-ம் தேதியன்று பிரதமர் மோடியை சந்தித்து உங்கள் தேர்வு, மனு சாஸ்திரமா? அல்லது அரசியலமைப்பு சட்டமா? என்ற கேள்வியை எழுப்ப உள்ளதாக தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்திலிருந்து புதிதாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, தான் பாஜகவால் குறிவைக்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும், தலித் மக்களின் பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ள ஜிக்னேஷ் மேவானிக்கும், ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. புனேவில் உள்ள பீமா கோரேகானில் ஏற்பட்ட வன்முறைக்கும், அங்கு 28 வயது தலித் இளைஞர் இறந்ததற்கும் ஜிக்னேஷ் மற்றும் காலித்தின் வன்முறையை தூண்டும் பேச்சுகளே காரணம் என்று அம்மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜிக்னேஷ், “இந்த நாட்டில் ஏன் தலித்துகள் பாதுகாப்பாக இல்லை. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கும் நம்மால் ஏன் இந்த ஜாதிப் பேயை அகற்ற முடியவில்லை? நான் வரும் ஜனவரி 9-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கப் போகிறேன். அப்போது கையில் மனுஸ்மிருதியையும், அரசியலமைப்பு சட்டத்தையும் எடுத்துச் சென்று, நீங்கள் எதை தேர்வு செய்யப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப் போகிறேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “எனது பேச்சின் எந்தப் பகுதியும் வன்முறையை தூண்டுவதாக இல்லை. நான் குறிவைக்கப்படுகிறேன். சங் பரிவாரைச் சேர்ந்தவர்களும், பாஜகவை சேர்ந்தவர்களும் எனது வளர்ச்சியை தடுக்க குழந்தைத்தனமாக என் மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். குஜராத் தேர்தலில் பெற்ற அடியால் இப்படி நடந்துகொள்கிறார்கள். அதோடு அவர்களுக்கு 2019-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்த பயம் இப்போதே வந்துவிட்டது” என்று ஜிக்னேஷ் மேவானி கூறினார்.