இந்தியா

ரயிலில் பால் இன்றி தவித்த குழந்தை - துரிதமாக வாங்கிக்கொடுத்த காவல் அதிகாரி

ரயிலில் பால் இன்றி தவித்த குழந்தை - துரிதமாக வாங்கிக்கொடுத்த காவல் அதிகாரி

webteam

குடிப்பதற்கு பால் இல்லாமல் தவித்த குழந்தைக்கு காவல்துறை அதிகாரி பால் வாங்கிக் கொடுத்த நிகழ்ச்சி பலரது பாராட்டை பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த முறை கொரோனா தாக்கம் அதிகம் இல்லாத மாநிலங்களுக்கு இடையே சில கட்டுப்பாடுகளுடன் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆகவே அதனைப்பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் முறையாக கடைகள் இன்னும் திறக்கப்படாததால் மக்கள் ரயில் பயணத்தின் போது தேவைக்கு ஏற்ப உணவு பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றன.ர் இந்த ரயில் பயண கஷ்டங்களுக்கு இடையே அவ்வப்போது மனிதநேயமிக்க சில செய்திகளும் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன.

இந்நிலையில், இந்திய ரயில்வே துறையான டி.ஆர்.எம் ராஞ்சி ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்வான நிகழ்வு பற்றி தகவல் பகிரப்பட்டுள்ளது. அந்தத் தகவல் பலரது மனங்களை ஈர்த்துள்ளது. மெஹ்ருன்னிசா என்ற பெண்மணி தனது நான்கு மாத குழந்தையுடன், பெங்களூரிலிருந்து கோரக்பூருக்கு ஒரு ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரயில் ஹதியா நிலையத்திற்கு வந்தவுடன், மெஹ்ருன்னிசா தனது குழந்தைக்கு கொஞ்சம் பால் ஏற்பாடு செய்யுமாறு ஒரு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மெஹ்ருன்னிசா அதிகாரிகளிடம் பேசிய போது ஏ.எஸ்.ஐ. சுஷீலா பராய்க் அங்கே இருந்துள்ளார்.

சுஷீலா பராய்கின் வீடு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. மெஹ்ருன்னிசாவின் நிலைமையை பற்றி கேள்விப்பட்டவுடன், அவர் வீட்டிற்கு விரைந்து சென்று குழந்தைக்கு தேவையான ஒரு பால் பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார். ரயில் நிலையத்தில் காவல்துறை அதிகாரி மெஹ்ருன்னிசாவிடம் பால் பாட்டிலை ஒப்படைக்கும் படத்தை டி.ஆர்.எம் ராஞ்சி ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கடந்த மே மாதத்தில், ஒரு ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் நான்கு மாத குழந்தைக்கு ஒரு பால் பாக்கெட் வழங்குவதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயிலின் பின்னால் ஓடி ஒப்படைத்தக் காட்சி பலரையும் கவர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.