இந்தியா

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை! ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்! 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

ச. முத்துகிருஷ்ணன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடியில் பயின்று வரும் மாணவி உட்பட 8 கல்லூரி மாணவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து ஜார்க்கண்டில் உள்ள குந்தி மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் துணை வளர்ச்சி ஆணையர் இல்லத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டனர். விருந்தில் மாணவி தனியாக இருந்ததை சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டான சையத் ரியாஸ் அகமது பார்த்துள்ளார். அப்போது அவர் அந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த மாணவி புகார் அளித்தார்.

இதையடுத்து அகமது மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 354 (பெண்ணைத் தாக்குதல்), 354A (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 509 (ஒரு பெண்ணை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. "குந்தி மாவட்டம் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்ட சையத் ரியாஸ் அகமதுவை இடைநீக்கம் செய்ய முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அகமதுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.