அவதூறான தகவலை வெளியிட்ட வலைத்தளத்தின் மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா முடிவு செய்துள்ளார். இத்தகவலை மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா இது குறித்து விடுத்த அறிக்கையை பியுஷ் கோயல் டெல்லியில் வெளியிட்டார். தம் மீது தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகவும் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தவே இது போன்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஜெய் ஷா அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் பியுஷ் கோயல், ஜெய் ஷா எந்த ஒரு தவறும் செய்திருக்க மாட்டார் என பாரதிய ஜனதா நம்புவதாக தெரிவித்தார். மேலும் இவ்விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடப்போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜெய் ஷா நடத்தும் நிறுவனத்தின் வர்த்தகம் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வெகுவாக உயர்ந்ததாக ஆங்கில வலைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.