இந்தியா

பெண்ணின் தலையில் எச்சில் துப்பி சிகை அலங்காரம் - சிக்கலில் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்

JustinDurai

தண்ணீருக்கு பதிலாக எச்சிலை துப்பி, பெண் ஒருவருக்கு சிகை அலங்காரம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல அழகுக்கலை நிபுணரான ஜாவேத் ஹபீப், சமீபத்தில் உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினார். பயிற்சிப்பட்டறையில் பூஜா குப்தா என்கிற ஒரு பெண்ணை மேடைக்கு வரவழைத்து அவரது கூந்தலை சிகை அலங்காரம் செய்து பார்வையாளர்களுக்கு காண்பித்தார் ஜாவேத் ஹபீப். அப்போது பூஜா குப்தாவின் தலையில் தனது எச்சிலை துப்பிய அவர், "பார்லரில் தண்ணீர் இல்லையென்றால் உமிழ்நீரை பயன்படுத்துங்கள்" என்று ஜாவேத் ஹபீப் கூறியதும் பார்வையாளர்கள் சிரித்து கைத்தட்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஜாவேத் ஹபீப்பின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் பூஜா குப்தா தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் ஜாவேத் ஹபீப்பின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தார். பயிற்சிப்பட்டறையில் ஆணவத்துடன் நடந்துகொண்ட ஹபீப், தன்னை அவமானப்படுத்தவே மேடைக்கு அழைத்ததாக அவர் கூறினார்.

இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜாவேத் ஹபீப்புக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அழகுக்கலை நிபுணர் ஜாவேத் ஹபீப் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இது நடந்தது பயிற்சிப் பட்டறையில். அழகுக்கலை தொழிலில் உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த அமர்வுகள் மிக நீண்டதாக இருக்கும்போது, நாம் அவற்றை போராடிக்காமல் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகவே நான் அவ்வாறு செய்தேன். இதனால் நீங்கள் புண்பட்டிருந்தால், என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள்'' என்று அவர் கூறியுள்ளார்.