Jantar Mantar: An Astronomical Marvel That Became Delhi's Protest Ground PTI
இந்தியா

ஜந்தர் மந்தர்: வானியல் அதிசயம்! போராட்டக் களமாக எப்படி மாறியது?

வானியல் ஆராய்ச்சிக்காக 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜந்தர் மந்தர், இன்று டெல்லியின் முக்கியப் போராட்டக் களமாக மாறியிருக்கிறது.

PT WEB

ஜந்தர் மந்தர், 18ஆம் நூற்றாண்டில் வானியல் ஆய்வகமாக உருவாக்கப்பட்ட இடம், இன்று போராட்டங்களின் மையமாக மாறியுள்ளது. விவசாயிகள் போராட்டம் முதல் ஜென்-சி ஆர்ப்பாட்டங்கள் வரை, அரசியல் கவனத்தை ஈர்க்கும் முக்கிய இடமாக இது திகழ்கிறது. இதன் வரலாற்று சிறப்பும், வானியல் கருவிகளின் துல்லியமும் இதனை தனித்துவமாக்குகின்றன.

செய்தியார்: துர்கா தேவி சரவணன்

டெல்லியின் அடையாளமாகத் திகழும் ஜந்தர் மந்தர், இன்று ஜென்-சி (Gen Z) போராட்டங்களின் மையப் பகுதியாக உள்ளது. இதற்கு முன்னர் விவசாயிகள் போராட்டமும், அதற்கும் முன்னர் ஆம் ஆத்மி இயக்கத்தின் போராட்டமும் என, போராட்டங்களுடன் பின்னிப் பிணைந்த இடமாகவே இது இருந்து வருகிறது. நாடாளுமன்றம், நார்த் பிளாக், சவுத் பிளாக் போன்ற நாட்டின் முக்கிய அதிகார மையங்களை இணைக்கும் டெல்லியின் இதயப் பகுதியில் அமைந்திருப்பதே ஜந்தர் மந்தர்.

ஜந்தர் மந்தர் என்றாலே தற்போது நமக்கு ஞாபகம் வருவது ஆர்ப்பாட்ட சத்தங்களும், போராட்டக் களங்களும் தான். மக்களின் எழுச்சி குரல் ஒலிக்கும் ஜந்தர் மந்தர், வானியல் இயக்கங்களை ஆராய்ச்சி செய்யும் இடம் என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஜந்தர் மந்தர் மற்ற சுற்றுலாத் தளங்கள் போலின்றி, நம்மை உற்றுநோக்கவும், நிதானிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்.

Jantar Mantar: An Astronomical Marvel

1724 முதல் 1730 வரையிலான காலகட்டத்தில், ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் ஜெய் சிங் II வட இந்தியா முழுவதும் ஐந்து வானியல் ஆய்வகங்களைக் கட்டினார். இதில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் தான் முதலில் கட்டப்பட்டது. ஐந்தில் மிக விரிவான ஆய்வகம் ஜெய்ப்பூரில் அதையடுத்துக் கட்டப்பட்டது. மற்றவை வாரணாசி, உஜ்ஜைன், மதுரா ஆகிய இடங்களில் சிறிய வடிவங்களாகக் கட்டப்பட்டன. ஒவ்வொரு ஜந்தர் மந்தரும் மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. அடிப்படைக் கருவிகள் எல்லா இடங்களிலும் ஒரே வானியல் கொள்கைகளைப் பின்பற்றினாலும், அவற்றின் அளவு, பொருட்கள், கட்டுமானம் ஆகியவை நகருக்கு நகர் கணிசமாக மாறுபடுகின்றன. ஒரே மாதிரி இரண்டு ஜந்தர் மந்தர்கள் கூட இருக்காது.

டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தர் ஆய்வகங்கள் மிகவும் பிரபலமானவை, அதிகம் பார்வையிடப்படுபவை. ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தர் யுனெஸ்கோவின் (UNESCO) உலகப் பாரம்பரியத் தளமாகும். இங்கு உலகின் மிகப்பெரிய கல்லாலான சூரிய மணிக்காட்டி உள்ளது.

ஆனால் தற்போது நான்கு ஜந்தர் மந்தர்களே உள்ளன. மதுராவில் இருந்த ஐந்தாவது ஜந்தர் மந்தர், அதன் கோட்டையுடன் சேர்ந்து 1857-க்கு முன்பு இடிக்கப்பட்டது.

ஜந்தர் மந்தர் எனும் பெயர் வந்த காரணம்:

ஜந்தர் மந்தர் என்ற பெயர் சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தது. "ஜந்தர்" என்றால் "யந்திரம்"; அதாவது ஒரு கருவி அல்லது இயந்திரம். "மந்தர்" என்பது "மந்திரா" என்பதிலிருந்து வந்தது; இதன் அர்த்தம் கணக்கிடுவது. இரண்டையும் சேர்த்தால், "கணக்கீட்டுக்குப் பயன்படும் கருவி" எனப் பொருள் படும். வானியல் இயக்கங்களையும், நேரத்தையும் கணக்கிடுவதால் இதற்கு ஜந்தர் மந்தர் என பெயரிடப்பட்டிருக்கிறது.

ஜந்தர் மந்தரின் சிறப்பம்சம்:

நேரத்தைக் கணிக்கவும், வானியல் நகர்வுகளைக் கணிக்கவும் இன்று தொழில்நுட்பங்கள் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆனால், 18ஆம் நூற்றாண்டில் செங்கல், மரம், மற்றும் கல்லால் ஆன பிரமாண்டமான கட்டமைப்புகளைக் கொண்டு, ஒவ்வொரு கருவியும் தனித்துவமாகவும் துல்லியமாகவும் கணிதம் மற்றும் வடிவவியல் வடிவமைப்புடன் இன்று வரை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

ஜெய்ப்பூரில் உள்ள சாம்ராட் யந்திரம் உலகின் மிகப்பெரிய சூரிய கடிகாரம். இந்தச் சூரியக் கடிகாரம் நேரத்தை அரை நொடி துல்லியத்துடன் கணிக்க உதவுகிறது.

Jantar Mantar: An Astronomical Marvel

ஜந்தர் மந்தர் போராட்டக் களமாக மாறியது எப்போது:

1980-களின் வரை, டெல்லியில் ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் இந்தியா கேட் அருகிலுள்ள போட் கிளப் பகுதியில் தான் நடைபெற்றன. 1988-ல் நடந்த விவசாயிகளின் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது டெல்லியின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பின், அனுமதிக்கப்பட்ட முக்கியப் போராட்டப் பகுதியாக அதிகாரிகள் ஜந்தர் மந்தரைத் தேர்ந்தெடுத்தனர். 1993-ல் போராட்டத்துக்கான அதிகாரபூர்வ இடமாக ஜந்தர் மந்தர் சாலை நியமிக்கப்பட்டது. இந்த இடம் நாடாளுமன்றத்திற்கு அருகில் இருப்பதால், அரசியல் மையத்தின் கவனத்தை எளிதாகப் பெற முடியும். அதே நேரத்தில், நகரத்தின் மற்ற பகுதிகளை முடக்காமலேயே காவல்துறை தடுப்புகள் அமைத்துக் கட்டுப்படுத்தும் அளவுக்குச் சீரான பகுதியாகவும் இது உள்ளது. தற்போது ஒழுங்குமுறைக்குட்பட்ட போராட்டங்களை நடத்தக்கூடிய நிலையான இடமாக இது திகழ்கிறது. இன்று போராட்டக் களத்தின் முக்கிய புள்ளியாகப் பார்க்கப்படும் இந்த இடத்திற்குப் பின்னால் இத்தகைய வரலாற்று சிறப்பம்சமும் இருப்பது நம்மை வியக்க வைக்கிறது.