ஜம்மு பேருந்து நிலையத்தில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் உத்தராகண்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஜம்மு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் பெரும்பாலான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் படுகாயமடைந்தனர். மேலும், வாகனங்கள் நிறுத்தம் இடங்கள் முற்றிலும் சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உத்தராகண்டைச் சேர்ந்த ஷாரிக் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.
காலை வெளியான தகவலின்படி 18 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 32 பேர் காயம்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில், மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதத்திலிருந்து தற்போது வரை ஜம்மு நகரில் மூன்றாவது முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலில் நடத்திய இஸ்புல் மூஜாஹித் அமைப்பைச் சேர்ந்த யாசிப் பத் என்பவரை கைது செய்துள்ளதாக, ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் கூறியுள்ளார்.