இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: நள்ளிரவு தாக்குதலில் காவலரும் உயிரிழப்பு

webteam

கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மறைந்திருக்கும் பகுதிகளில் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனிக்கிழமை நள்ளிரவில் ஸ்ரீநகர் புறநகர்ப் பகுதியான பந்தா செளக்கில் இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அன்று மாலையில் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் மற்றும் சிஆர்பிஎப் படை வீரர்கள் இணைந்து தேடுதல் பணியைத் தொடங்கினர்.

மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த தீவிரவாதிகளைச் சுற்றிவளைத்து படையினர் தாக்குதல் நடத்தினர். இருளைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக பெரும் வெளிச்சத்தை ஏற்படுத்தி, அவர்களை பாதுகாப்புப் படையினர் வளைத்தனர். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே சனிக்கிழமை காலையில், புல்வாமா மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மூன்று தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.