லடாக்கில் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருவதால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? அல்லது மாநிலம் மூன்றாக பிரிக்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
இதனால் காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் நள்ளிரவு முதல் இணையதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் உஸ்மான் மஜித் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் தரிகாமி இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நள்ளிரவு முதல் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும், அங்கு இன்று வழக்கம் போல கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.