இந்தியா

கடுமையான பனிப்பொழிவு: காஷ்மீரில் ஆப்பிள் விளைச்சல் பாதிப்பு

jagadeesh

காஷ்மீர் என்றாலே நம் நினைவுக்கு வருவது பனிப் பிரதேசங்களும் ஆப்பிள்களும் தான். ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, பட்கம், சோஃபியான், புல்வாமா ஆகிய மாவட்டங்களில் அதிகம் விளையும் ஆப்பிள்கள் மிகுந்த சுவையுடன் இருக்கும். இவை இந்தியா மட்டுமின்றி வேறு பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நடப்பு பருவத்தில் மொத்தம் 10.78 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான ஆப்பிள்கள், ஜம்மு காஷ்மீரிலிருந்து நாட்டின் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை சுமார் 18 லட்சத்து 60 ஆயிரத்து 663 மெட்ரிக் டன் ஆப்பிள்கள் ஏற்றுமதி ஆனதில் அது கடந்த ஆண்டை விட 44 சதவிகிதம் சரிந்தது. இத்தனைக்கும் கடந்த 2001ஆம் ஆண்டில் 2 லட்சம் ஏக்கர் அளவை விட நடப்பாண்டில் 3.60 லட்சம் ஏக்கர் அளவில் ஆப்பிள் விளைச்சல் செய்யப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் எல்லையில் பயங்கரவாத தாக்குதல் என்றாலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல், லாரி ஓட்டுநர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தப்படும் தாக்குதல் என்றே கூறப்படுகிறது. இந்த சம்பவங்களால் அச்சமடைந்த பல ஓட்டுநர்கள் பணிக்குத் திரும்பாமல் வீட்டிலேயே முடங்கியிருப்பதாகவும் இதனால் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஆப்பிள் விவசாயிகளுக்கு பனிப்பொழிவு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

புல்வாமா மற்றும் சோஃபியான் மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அள‌வு பனிப்பொழிவு நிகவுகிறது. இதனால் அங்குள்ள ஆப்பிள் மரங்களில் பனி படர்ந்திருப்பதால் அதனைத் தாங்க முடியாமல் கிளைகள் முறிந்துவிழுகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 70 சதவிகிதம் அளவில் ஆப்பிள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். முறிந்த மரங்கள் குறித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் நிவாரண உதவி கேட்கப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.