இந்தியா

நாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது !

webteam

இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தான 'ஜல் மார்க் விகாஸ்' திட்டத்தை நாளை பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கி வைக்க உள்ளார். 

குறைந்த செலவில் சுற்றுச்சூழலை பாதிக்காத போக்குவரத்து வசதியை அளிப்பதும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுமே 'ஜல் மார்க் விகாஸ்' திட்டத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது. மேலும் நீர் வழிப் போக்குவரத்தை ஊக்கப்படுத்து வகையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி கங்கை நதியில் உலக வங்கியின் 50 சதவிகித நிதியுதவியுடன் சுமார் 5 ஆயிரத்து 369 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட “ஜல் மார்க் விகாஸ்” திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். 

வாரணாசியுடன் ஹால்தியாவை இணைப்பதற்கான “ஜல் மார்க் விகாஸ்” என்ற கப்பல் போக்குவரத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து அதிகரிக்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.கொல்கத்தா துறைமுகத்திலிருந்து “ரவீந்திரநாத் தாகூர்” என்ற முதலாவது சரக்குக் கப்பல் தேசிய நீர்வழிப்பாதை வழியாக பயணித்து வாரணாசிக்கு வருவதையடுத்து, நாளை பிரதமர் நரேந்திர மோடி அதனை வரவேற்கிறார்.

இதனையடுத்து கங்கை நதியின் நான்கு கரைகளை இணைக்க, படகு போக்குவரத்து முனையங்கள் அமைக்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில் எண்ணற்ற  நீர்வழிப் போக்குவரத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளததால், நீர்வழிப் போக்குவரத்துகளின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.