சித்தராமையா, ஜெய்சங்கர்
சித்தராமையா, ஜெய்சங்கர் file image
இந்தியா

“சூடான் இந்தியர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்” - சித்தராமையா மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

Prakash J

சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே நடைபெற்றுவரும் மோதலில், இதுவரை 200 பேர் பலியாகி இருப்பதாகவும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலால், அப்பகுதி போர்க்களமாகக் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ”சூடானில் 31 கர்நாடக பழங்குடியினர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர், உணவு இல்லாமல், எதிர்காலத்தை நினைத்து, உயிர் பயத்துடன் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

சித்தராமையா

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

இதற்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சூடானில் மோதல் தொடங்கிய நாள் முதலே இந்திய தூதரகத்துடன் தொடர்பில் உள்ளோம். இந்தியர்கள் பாதுகாப்பாய் உள்ளனர்.

ஜெய்சங்கர்

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் விவரங்கள் மற்றும் இருப்பிடங்களை பொது வெளியில் தெரிவிக்க முடியாது. ஆனால், தேர்தலுக்காக இவ்விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள்” என சித்தராமையாவுக்கு பதில் பதிவிட்டுள்ளார்.