ஹரியானாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 24 வயது கைதி தற்கொலை செய்துகொண்டார்.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தின் ஷாஜகான்பூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சோனு. இவரைக் கடந்த 14ஆம் தேதி அம்மாவட்ட போலீஸார் கைது செய்தனர். ஷார்ஜகான்பூர் கிராமத்தினருக்கும் அருகே இருக்கும் மற்றொரு கிராமத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் காவல்துறையினரும் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து இரு கிராமத்தைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் சோனு. அவரை ஃபரிதாபாத்தில் உள்ள நீம்கா சிறையில் அடைத்திருந்தனர். சோனுக்கு கடந்த புதன் கிழமை அன்று காவல்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வைத்தனர். சோதனை முடிவுகள் இன்று வெளியாகி அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
இதனால் சோனு மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர் தனது சிறை அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தை அறிந்த சோனு கிராமத்தினர் சாலைகளை மறித்து, காவல்துறையினர் மீது கற்களை எறிந்தனர்.