இந்தியா

ரூ. 200 கோடி பண மோசடி வழக்கு - ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன்

webteam

சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்துக்கொண்டே தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. அதில் சுகேசின் சட்ட விரோத நடவடிக்கைகள் ஜாக்குலினுக்கு தெரியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது முதலில் சுகேஷ் சந்திரசேகர் தன்னை தனியார் தொலைக்காட்சியின் ( சன் டிவி ) நிறுவனர் எனவும், பழைமை வாய்ந்த அரசியல் தலைவர்கள் குடும்பத்திலிருந்து வந்தவன் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் அதற்குப் பிறகு மினி கூப்பர் கார், விலை உயர்ந்த கடிகாரங்கள், ஹேண்ட் பேக், காலணிகள், பூச்செண்டுகள் உள்ளிட்ட 7 கோடி ரூபாய் பொருட்கள் பரிசளித்ததாகவும் விசாரணையின் போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெரிவித்திருந்தார்.

சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பல விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பெற்றது தொடர்பாகவும், அவரது மோசடி குறித்த விவரங்களை கோரியும் டெல்லி பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜாமீன் கோரிய வழக்கு இன்றைய தினம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சைலேந்திர மாலிக் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கோரிக்கையை ஏற்று ரூ. 50,000 பிணைத்தொகையுடன் இடைக்கால ஜாமீனை வழங்கினார். மேலும் இவ்வழக்கில் அமலாக்க துறையினருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, வழக்கை அக்டோபர் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.