இந்தியா

காஷ்மீர் அரசியல் தலைவர்கள் மீதான பொது பாதுகாப்பு வழக்குகள் வாபஸ்..!

webteam

ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொது பாதுகாப்பு சட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெற்றது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக அம்மாநில அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர். அத்துடன் பலர் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. தற்போது அந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கத்தின் தலைவரான ஷா ஃபெசெல் மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இவர் மீது கடந்த பிப்ரவரி மாதம் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னதாக சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராகப் போராடியதற்காகக் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் காவல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தார்.

இதுதவிர மக்களின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சர்தாஜ் மத்னி, பீர் மன்சூர் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் மற்ற அரசியல் தலைவர்கள் மீதான பொது பாதுகாப்பு சட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.