யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கிளைக் கோயிலைக் கட்ட 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆலோசனைப்படி, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் ஏழுமலையான் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி பசந்த் குமார், நிர்வாக உறுப்பினர் ஜெ.சேகர் உள்ளிட்டோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு எம்.பி வி.விஜய சாய் ரெட்டி தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஜம்மு-காஷ்மீரின் தலைமைச் செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலுக்கு வரும் வட இந்திய பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் பணியை மேற்கொள்வதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜம்மு-காட்ரா தேசிய நெடுஞ்சாலையில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கோயிலைக் கட்டுவதற்கு தும்மி மற்றும் மாஜின் ஆகிய இரண்டு இடங்களை நிர்வாகக் குழு தேர்வு செய்துள்ளது. அத்துடன் 100 ஏக்கர் நிலத்தில் கோயிலுடன், வேதப் பள்ளி மற்றும் மருத்துவமனை ஒன்றையும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்களிடம் நிதி வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருப்பதி தேவஸ்தானம் சார்பிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனப்பட்டுள்ளது. மேலும், கோயிலை முழுப் பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.