மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்தும் ஆட்சியமைக்க யாரும் முன்வராததால் அங்கு குடியரசு ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா தனது கட்சி பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறது.
இதனிடையே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்ட நிலையில் இந்த 3 கட்சியினரும் ஆளுநரை நாளை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து அமைந்துள்ள சிவசேனாவின் கூட்டணி 5 ஆண்டுகள் வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் முழுமையாக ஆட்சி செய்யும் என கூறியுள்ளார்.
நாக்பூர் பகுதியில் ஏற்பட்ட மழைச்சேதங்களை இன்று பார்வையிட வந்த சரத்பவார், பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை என்பதால் நாங்கள் ஆட்சி அமைப்பதில் எந்த அரசியல் நெருக்கடியும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், “இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்றோ அல்லது நாளைக்குள்ளாகவோ ஆட்சியமைப்போம். நிச்சயமாக ஐந்து ஆண்டுகள் வரை எங்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சி நிறைவு செய்யும். எங்களுக்கான விஷயங்கள் குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், குடியரசுத் தலைவரின் ஆட்சி ரொம்ப நாள் வரை நீடிக்காது என்றும் மகாராஷ்டிராவிம் மீண்டும் புதிய தேர்தல் நடத்தப்படாது என்றும் தங்களது அரசு மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும். நிலையான ஆட்சியாக நிச்சயம் தரும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.