இந்தியா

”பசி தீவிரமான நாடுகள் பட்டியலில் 101வது இடமா?”- உலக பட்டினி அறிக்கைக்கு இந்தியா கண்டனம்

நிவேதா ஜெகராஜா

உலக பட்டினி அறிக்கையின்படி மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளதாக நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டது. 94வது இடத்திலிருந்த இந்தியா 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 'குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்'(The Global Hunger Index) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியாவுக்கு 101வது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பசி தீவிரமான நாடுகள் என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. கடந்தாண்டு வெளியான இந்த அறிக்கையில் 107 நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் இருந்தது.

இந்நிலையில் இந்த முடிவு தங்களுக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “உலகளாவிய பசி அறிக்கை 2021-ல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள்தொகையின் விகிதம் மற்றும் அடிப்படையில் இந்தியாவின் FAO தரம் மற்றும் மதிப்பீடு குறைவாக  வந்திருப்பது  அதிர்ச்சியளிக்கிறது.

உலகளாவிய பசி அறிக்கையின் வெளியீட்டு நிறுவனமான ‘உலகளாவிய கவலை மற்றும் வெல்ட் ஹங்கர் ஹில்ஃப்’, தங்களின் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு தங்கள் சரியான ஆய்வை செய்யவில்லை என்றே நாங்கள் நினைக்கிறோம். FAO -வின் இந்த மதிப்பீடு, அறிவியல் ஆதாரமற்றவையாக உள்ளன.

இந்த ஆய்வறிக்கையின்படி பார்த்தால், இந்த பிராந்தியத்தின் மற்ற நான்கு நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலெல்லாம் கோவிட் காரணமாக வேலை/வணிக இழப்பு மற்றும் வருமான நிலை குறைப்பு போன்றவை ஏற்படவேயில்லை என்றே நமக்கு தெரிகிறது. இது எங்களுக்கு ஆச்சிர்யமளிக்கும் விதமாக உள்ளது. மாறாக அந்த நாடுகளெல்லாம் 'ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் தொடர்பான விகிதத்தில்' 2018-20 ஆண்டுகளில் முறையே உயர்ந்துள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.