இந்தியா

"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்

Veeramani

மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவின்போது கூச் பெஹார் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எஃப் நடத்திய துப்பாக்கிச் சூடு “இனப்படுகொலை” என அம்மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஏப்ரல் 10 ஆம் தேதி சனிக்கிழமையன்று மேற்கு வங்கத்தில் நடந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவில், கூச் பெஹாரின் சிதால்குச்சி வாக்குச் சாவடியில் சிஐஎஸ்எஃப் நடத்திய துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட "இனப்படுகொலை" என்று  அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள 5 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக சிலிகுரியில் நடந்த பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி,  “ஒரு கும்பலைக் கையாள மத்திய படைகளுக்கு தெரியவில்லை, சிஐஎஸ்எஃப் மக்களிடம் பீதியை உருவாக்கவே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள், இது ஒரு இனப்படுகொலை. கும்பலை கட்டுப்படுத்த சிஐஎஸ்எஃப் பயிற்சி எடுக்கவில்லை, அவர்கள் எதற்காக துப்பாக்கிகளை பயன்படுத்தினார்கள். ஒரு கூட்டத்தைக் கட்டுப்படுத்த நெறிமுறைகள் உள்ளன, ஆனால் மக்களிடம் பீதியை உருவாக்கவே அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று அவர் கூறினார்.

 மேலும், “சிஐஎஸ்எஃப் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இவர்கள் அமைதியாக வரிசையில் நின்றார்கள், அவர்கள் ஏழைகள். அவர்கள் மீது ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினீர்கள். இந்த துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை நான் சந்திக்கக்கூட தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. ஆனால் இந்த இனப்படுகொலைக்கு எங்களுக்கு நீதி வேண்டும்” எனக் கூறினார்.

முன்னதாக, கூச் பெஹாரில் சிதால்குச்சி வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வன்முறையில், மத்திய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.