இந்தியா

''ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குளிக்கிறேன்'' - சிகிச்சை வேண்டி மருத்துவரை அணுகிய ஐடி ஊழியர்!

''ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குளிக்கிறேன்'' - சிகிச்சை வேண்டி மருத்துவரை அணுகிய ஐடி ஊழியர்!

webteam

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குளிக்கும் பழக்கம் ஏற்பட்டதால் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர், OCD (Obsessive Compulsive Disorder) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். OCD என்பது ஒருவித மனப்பிறழ்வு ஆகும். செய்த செயலையே திரும்ப திரும்ப செய்யத்தூண்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை வரை செல்வதும் உண்டு. இந்த வகை நோயால் பாதிக்கப்பட்ட அந்த ஐடி ஊழியர் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக குளித்துள்ளார்.

தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து குளிக்கத்தொடங்கும் இவர் காலை 6 மணி வரை குளிப்பார். அலுவலகம் சென்றுவந்து மீண்டும் குளிக்கத்தொடங்கும் அவர் குறைந்தது 4 மணி நேரங்கள் குளிப்பார். இதற்காக அவர் ஒருநாளைக்கு 3 முழு சோப்களை பயன்படுத்தியுள்ளார். இவரை OCD நோயில் இருந்து மீட்கப்போராடிய அவரது மனைவியும் செய்வதறியாமல் விவாகரத்து செய்துவிட்டதாக அவரின் உறவினர்கள் கூறுகின்றனர். மகன் செய்வதைப் பார்த்து அவரது தாயும் மனமுடைந்துள்ளார். இந்த நோயினால் குடும்ப வாழ்க்கை மட்டுமின்றி அன்றாட வாழ்க்கையை கூட அவர் இழந்துவிட்டதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் தற்போது மருத்துவர்களை அணுகியுள்ள அந்த ஐடி ஊழியருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் ராமையா, கடுமையான மன உளைச்சல் காரணமாக இப்படிப்பட்ட மன நோயால் பாதிக்கப்படுவதாகவும், அந்த ஐடி ஊழியருக்கு சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.