இந்தியா

ஐடி+ஐடி=ஐடி..... மோடி சொல்லும் புதுக்கணக்கு

ஐடி+ஐடி=ஐடி..... மோடி சொல்லும் புதுக்கணக்கு

Rasus

தகவல் தொழில் நுட்பமும் இந்தியர்களின் திறமையும் சேர்ந்ததுதான் நாளைய இந்தியா என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி உச்சநீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த வழக்கு மேலாண்மை தகவல் அமைப்பை (ICMIS) இன்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது நாளை இந்தியாவிற்கான புதிய ஈக்குவேஷன் ஒன்றை அவர் கூறினார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியாக ஐசிஎம்ஐஎஸ் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இருந்து வரும் வழக்கு கோப்புகள் அனைத்தையும் டிஜிட்டலாக அனுப்பினால் போதும். இவை இணையதளத்திலும் பதிவேற்றப்படும். இதனால் காகிதங்களின் பயன்பாடு குறையும்.

இந்த திட்டத்தைப் பற்றிப் பேசிய மோடி, உயர்நீதிமன்ற நீதிபதிகளும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கோடைகால விடுமுறையைக் குறைத்து நிலுவையிலுள்ள வழக்குகளை முடிக்க ஆர்வம் காட்டுவதை பாராட்டினார். இது குறித்து தானும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகரும் பேசியதாகவும் மோடி தெரிவித்தார். டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் நிர்வாகத்தை எளிமையாகவும் திறமையாகவும் குறைந்த செலவிலும் நடத்த முடியும் என்றும் மோடி கூறினார்.

IT+IT=IT என்று ஒரு கணக்கைச் சொன்னார் மோடி. IT - Information Techonology தகவல் தொழில் நுட்பம் + IT - Indian Talent இந்தியர்களின் திறமை = IT - India Tomorrow நாளைய இந்தியா என்று மோடி அந்தக் கணக்கை விளக்கினார். தொழில்நுட்பமும், இந்தியர்களின் திறமையும் ஒன்று சேர்ந்ததுதான் நாளைய இந்தியா என்று சொன்னார் அவர்.