இந்தியா

அதிகாரத்தால் ஆட்சியை மாற்றுவது பாஜக அரசுக்கு கைவந்த கலை: நாராயணசாமி

அதிகாரத்தால் ஆட்சியை மாற்றுவது பாஜக அரசுக்கு கைவந்த கலை: நாராயணசாமி

Veeramani

அதிகார பலத்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை மாற்றுவது பாஜகவுக்கு கைவந்த கலை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் வருகிற திங்கள்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழிசை சவுந்திரராஜன் புதுச்சேரியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற திங்கள்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் நாராயணசாமியை கேட்டுக் கொண்டுள்ளது.

மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பை நிறைவு செய்யவும், வாக்கெடுப்பின் போது, உறுப்பினர்கள் தங்களது கையை உயர்த்தி காட்ட வேண்டுமெனவும், முழு நிகழ்ச்சியும் வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க தலைமைச் செயலர் மற்றும் டிஜிபியை துணை நிலை ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 30 எம்.எல்.ஏ.க்கள் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், மூவர் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். தற்போதைய நிலையில், ஆளும் கட்சியில் 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அரசுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் மூவரும், ஒரு சுயேச்சையும் ஆதரவு அளிக்கின்றனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சி வரிசையில், என்.ஆர்.காங்கிரஸில் 7 பேரும், அதிமுகவில் 4 பேரும், பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

ஆளுநரை உத்தரவை அடுத்து, முதல்வர் நாராயணசாமி தன்னுடைய எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் பேசிய நாராயணசாமி, “அதிகார பலத்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை மாற்றுவது பாஜகவுக்கு கைவந்த கலை. எங்களை அரசை கவிழ்க்க பலமுறை திட்டம் தீட்டினார்கள், அதை நாங்கள் முறியடித்தோம். தேர்தல் நேரத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு வேலையை பாஜக தொடங்கியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமை இல்லை” என்று தெரிவித்தார்.