Mumbai IIT ANI
இந்தியா

IIT மும்பை மாணவர் உயிரிழப்பு.. பேராசிரியருக்கு நெருக்கடி? 10 பேர் குழு அமைப்பு!

மேலும், மாணவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

PT WEB

மும்பை ஐஐடி மாணவர் தேர்வின்போது செல்போன் மற்றும் ChatGPT பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த பின்னர், ஆலோசனை வழங்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என நிர்வாகம் கூறுகிறது. ஆனால் மாணவர் விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், சாதிப் பாகுபாடு, அழுத்தம், இடைநீக்கம் அச்சுறுத்தல் குறித்த புகாருடன் பெற்றோர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் - M. மீரா

மும்பை ஐஐடி வளாகத்தில், எனர்ஜி சயின்ஸ் அண்டு இன்ஜினீயரிங் (Department of Energy Science and Engineering) துறையில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த சாஹில் வகோடே என்ற மாணவர், தேர்வின்போது செல்போனை பயன்படுத்தியதாகவும், தேர்வு வினாத்தாளை ChatGPT-ல் பதிவேற்றி அதற்கான பதில்களை பெற முயன்றதாகவும் IIT மும்பை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் குறித்து மாணவரிடம் தேர்வுக் கண்காணிப்பாளர் மற்றும் துறைத் தலைவர் பேசியதாகவும், அவருக்கு ஆலோசனை வழங்கியதுடன், இந்த சம்பவம் அவரது கல்வி வாழ்க்கையைப் பாதிக்காது என உறுதியளித்ததாகவும் நிர்வாகம் கூறியிருந்தது. மேலும், மாணவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

IIT Mumbai Protest

இந்தச் சந்திப்புக்குப் பிறகு மாணவர் தனது விடுதி அறைக்குத் திரும்பியுள்ளார். பின்னர் அவரது அறையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர் மீது ஓர் ஆண்டு இடைநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என அச்சுறுத்தப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். அதன் காரணமாக, படிப்பு காலம் நீளும் வாய்ப்பும் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் உயிரிழந்த மாணவரின் பெற்றோர், கல்லூரி வளாகத்தில் சாதிப் பாகுபாடு மற்றும் பல்வேறு அழுத்தங்களை தங்கள் மகன் எதிர்கொண்டதாகவும் இதையடுத்து, படிப்பை முடித்த பிறகு எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும், பொறுமையாக இருக்குமாறும் பெற்றோர் அவருக்கு அறிவுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். பெற்றோரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த்தது.

Sahil's Parent

இது தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது. மும்பை குற்றப்பிரிவு ஏற்கனவே சாஹிலின் பெற்றோர் மற்றும் அவருடன் தேர்வு அறையில் இருந்த மாணவர்கள், விடுதியில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது. மேலும், IIT பாம்பே பேராசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாணவரின் மரணத்திற்கு தூண்டுதலாக இருந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள பேராசிரியர் சூர்யநாராயண் டூல்லாவை, மும்பை குற்றப்பிரிவு இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது.

இதற்கிடையில், IIT பாம்பே பேராசிரியர் டூல்லாவை விடுப்பில் அனுப்பியுள்ளது கல்லூரி நிர்வாகம். மாணவரின் மரணம் தொடர்பான சூழ்நிலைகளை விசாரிக்க 10 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவையும் கல்வி நிறுவனம் அமைத்துள்ளது. இந்தக் குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பேராசிரியர் ரமேஷ் வெங்கடேஸ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் IIT பாம்பே பேராசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகள், ஓய்வுபெற்ற அதிகாரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஏற்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ராஜினாமா கோரிக்கை மட்டும் ஏற்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Mumbai IIT

மேலும் சாஹில் பயன்படுத்திய லாக் செய்யப்பட்ட iPhone-ஐ தொழில்நுட்ப உதவியுடன் குற்றப்பிரிவு ஆய்வு செய்து வருகிறது. அதிலிருந்து தகவல்களை மீட்கும் முயற்சியில், அவரது ChatGPT பயன்பாட்டு வரலாறும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சரிபார்த்து, சம்பவங்களுக்கு இடையிலான தொடர்ச்சியை கண்டறிய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.