இந்தியா

சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - தினமும் 75 ஆயிரம் பேர் வருகை

jagadeesh

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை காலம் இன்னும் சில நாள்களில் முடிவடையவுள்ள நிலையில் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பின்பு, டிசம்பர் 27-ஆம் தேதி மண்டலப் பூஜை நிறைவடைந்து கோயிலின் நடை மூடப்படும். பின்பு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ஆம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 15-ஆம் தேதி மகரவி‌ளக்கு பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி காலை 8.06 முதல் காலை 11.13 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக ஐயப்பனுக்கு வழக்கமாக நடைபெறும் நெய் அபிஷேகம் அன்றைய தினம் காலை 7.30 மணிக்கே நிறுத்தப்பட்டு கோயிலின் நடை அடைக்கப்படும். பின்பு கோயிலில் கிரகண தோஷ நிவரத்தி பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்படும். அதுவரை பக்தர்கள் யாரும் கோயிலுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கேரள போலீஸார் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் முதல் 14 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பம்பா, நிலக்கல் மற்றும் சன்னிதானத்தில் இருக்கும் அதிகாரிகள் இடையே சரியான தொடர்பு இல்லாததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக எருமேலி, பொன்குன்னம், பத்தனம்திட்டா, பத்தனபுரம், செங்கநூர், நிலக்கல்லில் இருந்து கேரள பஸ்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

பல்வேறு பகுதிகளில் இருந்து நிலக்கல்லுக்கு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மேல்தான் பம்பாவுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகினர். இதனால் நிலக்கல்லில் அதிகாரிகளுக்கு எதிராக பக்தர்கள் போராடினர். இது குறித்து கேரள மாநில காவல் அதிகாரி ஒருவர் கூறியது " ஏறக்குறைய தினமும் சராசரியாக 75,000 பேர் சபரிமலைக்கு வருகின்றனர். மண்டலப் பூஜை தொடங்கி இதுவரை சுமார் 25 லட்சம் ஐயப்பனை தரிசித்தனர்" என தெரிவித்துள்ளார்.