இந்தியா

இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட்!

webteam

தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது.

கொரோனா காரணமாக கடந்த 11 மாதங்களாக தடைபட்டிருந்த இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு பணிகள் கடந்த மாதம் மீண்டும் தொடங்கின. அதன்படி, பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து மாலை 3 மணி 41 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட்.

தகவல் தொடர்பு சேவைக்கான அதிநவீன சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த ராக்கெட் ஆறு உந்து சக்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் இதுவரை 41 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், சிஎம்எஸ் 1, விண்ணுக்கு செல்லும் 42வது செயற்கை கோள்களாகும். 1400 கிலோ எடை கொண்டது இந்த சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள். இதன் ஆயுட்காலம் ஏழு ஆண்டுகளாகும்.

வானிலை பயன்பாடு மற்றும் நீட்டிக்கப்பட்ட c band அலைக்கற்றை தேவைகளுக்காகவே இந்த சிஎம்எஸ் 1 அனுப்பப்படுகிறது. தகவல் தொடர்புக்காக கடந்த 2011 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 12 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்துவிட்ட நிலையில் அதற்கு மாற்றாகவே சிஎம்எஸ் 1 தற்போது செலுத்தப்படவுள்ளது.