இந்தியா

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் இழப்பீடு

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் இழப்பீடு

webteam

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் வடிவமைத்த இஸ்ரோ குழுவின் முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவர் நம்பி நாராயணன். அவர் பணத்திற்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். விசாரணை என்ற பெயரில் நம்பி நாராயணனை காவல்துறையினர் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.

பின்னர், நம்பி நாராயணன் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என நிரூபிக்கப்பட்டு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மீண்டும் இஸ்ரோவில் சேர்ந்த அவருக்கு முக்கிய பொறுப்புகள் ஏதும் கொடுக்கப்படவில்லை. அதனால், 2001ஆம் ஆண்டு பணியிலிருந்து நம்பி நாராயணன் ஓய்வு பெற்றார். 

தன்னை பொய்யான குற்றச்சாட்டின் கீழ் வழக்கில் சிக்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திறமையை முடக்கும் வகையில், தன்னையும், தன் குடும்பத்தினரையும் அவமானப்படுத்திய காவல்துறை உயரதிகாரிகள் சிபி மேத்யூஸ், விஜயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நம்பி நாராயணன் சட்டப்போராட்டம் நடத்தி வந்தார். அதன் பயனாக இன்று உச்சநீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்‌க உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது தொடரப்பட்ட வழக்கு மற்றும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயின் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.