இந்தியா

“சந்திரயான் 2 இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகிறது” - இஸ்ரோ சிவன் 

“சந்திரயான் 2 இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகிறது” - இஸ்ரோ சிவன் 

webteam

நிலவை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22ம் தேதி ஏவப்பப்பட்டது சந்திரயான் 2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட சந்திரயான் 2, முதலில் புவி வட்டப்பாதையில் வட்டமடித்தது. அதன்பின் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, புவி வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு, நிலவின் வட்டப்பாதையை நோக்கிப் பயணித்தைத் தொடங்கியது. இந்தப் பயணம் இன்று காலை 9:30 மணியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து சந்திரயான் 2 செயற்கைக்கோள் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து, நிலவைச் சுற்றி வருகிறது. 

இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், “சந்திரயான் 2 திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கும். முதல் நாளில் இருந்து இன்றுவரை துல்லியமாக முன்னேறி வருகிறது. நாளை முதல் சில நாட்களுக்கு 4 அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழும். மணமகள் தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு மாறுவது போல சந்திரயான் பூமியில் இருந்து நிலவுக்கு மாறுகிறது.

நிலவை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டப்படி சந்திரயான் 2 தரையிறங்க போகிறது. நிலவில் கால் பதித்து சந்திரயான் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப் போகிறது” எனத் தெரிவித்தார்.