இந்தியா

‘சந்திரயான்2’ இந்த மாதம் விண்ணில் ஏவ வாய்ப்பு?   

‘சந்திரயான்2’ இந்த மாதம் விண்ணில் ஏவ வாய்ப்பு?   

webteam

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், வருகிற 21, 22 ஆம் தேதிகளில் ஏதாவது ஒருநாளில் விண்ணில் செலுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. 

ஒருநாளுக்கு முன்னதாகவே கவுன்டவுன் தொடங்கப்பட்ட நிலையில் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில், கவுன்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சந்திரயான் 2 விண்கலம், வருகிற 21, 22 ஆம் தேதிகளில் ஏதாவது ஒருநாளில் விண்ணில் செலுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வெளியான தகவலின்படி, சந்திரயானை நிலவுக்கு அனுப்பும் சூழல் வரும் 21, 22ஆம் தேதிகளில் உள்ளதாகவு‌ம், அதைத் தவறவிட்டால் செப்டம்பரில்தான் அனுப்ப முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

அதைத் தொடர்ந்து, இஸ்ரோவின் தொழில்நுட்பப் பிரிவு, கோளாறை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த 2 நாட்களுக்குள் முழுமையாக சீர்செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.