சந்திரயான் 3
சந்திரயான் 3 ISRO Twitter
இந்தியா

சந்திரயான் 2 உடன் தகவல் தொடர்பை ஏற்படுத்திய சந்திரயான் 3... உறுதிப்படுத்திய இஸ்ரோ!

Prakash J

நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே மூன்று முறை சந்திரயான்-3 விண்கலத்தின் உயரம் குறைக்கப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்பகுதியில் விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் தரையிறங்க உள்ளது. அதற்கான உகந்த இடத்தை தேர்வு செய்யும் வகையில் லேண்டர் புகைப்படங்களை எடுத்துவருகிறது. அந்த புகைப்படங்களை தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

இஸ்ரோ

இந்த நிலையில், சந்திரயான் 2 ஆர்பிட்டரோடு சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக தகவல் தொடர்பை ஏற்படுத்தி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனை இஸ்ரோ இன்று உறுதிப்படுத்தி உள்ளது. நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு நிலவில் லேண்டர் தரையிறங்க உள்ள நிலையில், இந்த தொடர்பை ஏற்படுத்தியிருப்பது வியப்பாகப் பார்க்கப்படுகிறது.

இதனால், சந்திரயான்-3 லேண்டர் மற்றும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் இடையே இருவழி தொலைதொடர்பு ஏற்பட்டு உள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி எல்.வி.எம் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 179 கிலோமீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்ட பாதையில் அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம், 16 நிமிடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளை கடந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சந்திரயான் 3 விண்கலம் சென்றது குறிப்பிடத்தக்கது.