இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மது தயாரிக்கும் நிறுவனத்தின் பீர் பாட்டில்கள் மீது மகாத்மா காந்தி படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பீர் நிறுவனம் சில தலைவர்களின் படங்களை பீர் பாட்டிலின் மீது பொறித்துள்ளது. அதில் மகாத்மா காந்தி படம் இடம்பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பிரச்னையைக் கிளப்பினார்.
பூஜ்ய நேரத்தில் பேசிய அவர், மக்கா ப்ரூவரி என்ற நிறுவனத்தின் பீர் பாட்டிலில் காந்தி படம் இடம்பெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். இதற்கிடையே, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ஆகியோர் வலியுறுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காந்தி உள்பட பல வரலாற்றுத் தலைவர்களின் படங்கள் பீர் பாட்டில்களில் இடம்பெற்றிருப்பதாக மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளையின் தலைவர் எபி ஜோஸ் ஏற்கனவே இருநாட்டு பிரதமர்களுக்கும் கடிதம் எழுதியிருந்த நிலையில், மாநிலங்களவையில் இந்த பிரச்னை எழுப்பப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த நிறுவனத்தின் மேலாளர் கிளாட் ரோர், எங்களது நிறுவனம் மனதளவில் புண்படுத்தியிருந்தால் இந்திய மக்களிடமும், இந்திய அரசிடமும் மனதார மன்னிப்பு கோருகிறோம். நாங்கள் மகாத்மா காந்தி மீது அதிகளவில் மரியாதை வைத்துள்ளோம். காந்தியின் படம் நீக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.