இந்தியா

“இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு துணை நிற்கின்றன” - ராஜ்நாத் சிங்

webteam

இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு துணை நிற்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலையில் இந்திய விமானப் படை ‘மீராஜ் 2000’ ரக போர் விமானங்களை கொண்டு பாகிஸ்தானின் பாலகோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் போர் கைதியாக சிக்கினார். அவர் இன்று வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மற்றொருபுறம் ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டார். அவர் இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மேலும் சுஷ்மா சுவராஜ் சிறப்பு உரையையும் ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் இந்தியாவை அழைத்தால் பாகிஸ்தான் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்லாமிய நாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங் தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய அவர், “பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் ஆதரவு அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தில் இந்தியா முதன்முறையாக பங்கேற்றுள்ளது. பயங்கரவாதத்தை பொருத்தவரை அது ஒரு சாதி, மதம் தொடர்புடையதாக கருத முடியாது. பயங்கரவாதத்தை ஒரு மதத்துடன் சேர்ப்பதை ஏற்கமுடியாது” என்றவர்  தேசிய புலானய்வு அமைப்பின் தூரித நடவடிக்கையால் பயங்கரவாதத்திற்கு செல்லும் நிதிகள் குறைக்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார்.