குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார். மசோதா தொடர்பாக முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்திருந்த சூழலில், அவர் வினவியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மசோதாக்கள் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக டெல்லியில் நடந்த மாநிலங்களவை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நாட்டின் மிக உயர்ந்த பதவியின் அரசமைப்பு அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அரசமைப்பு சட்டம் 145 உட்பிரிவு 3ஐ விளக்குவதுதான் நீதிமன்றத்தின் ஒரே உரிமை குறிப்பிட்டுள்ள ஜெகதீப் தன்கர், உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் 142ஆவது பிரிவை ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையைப் போன்று உச்ச நீதிமன்றம் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் செயல்பட முடியாது எனக் கூறியுள்ள ஜெகதீப் தன்கர், உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம்போல செயல்படுவதாகாவும் விமர்சித்துள்ளார். சட்டம் இயற்றுவது, நிர்வாக பணிகளை செய்வது போன்ற நாடாளுமன்றத்தின் பணிகளை உச்ச நீதிமன்றம் செய்வதாக தெரிவித்துள்ள அவர், நாம் எங்கே செல்கிறோம், நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
ஜனநாயகத்திற்காக நாடாளுமன்றம் ஒருபோதும் பேரம் பேசவில்லை எனத் தெரிவித்த ஜெகதீப் தன்கர், மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கவில்லை என்றால், அது சட்டமாகிறது எனவும் விமர்சித்துள்ளார். நாட்டில் அரசு, நீதி, நிர்வாகம் ஆகிய துறைகள் ஒன்றாக மலர வேண்டிய காலம் வந்துவிட்ட சூழலில், இவற்றில் ஏதேனும் ஒன்று மற்றொன்றுக்கு இடையூறு ஏற்படுத்துவது நல்லதல்ல எனவும் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.