இந்தியாவின் 2-வது விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான் அதற்கான ஆதாரத்தை ஏன் வெளியிடவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரவீஷ் குமார், கூறும்போது, ’’இந்தியாவின் 2 வது விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ் தான், அதற்கான ஆதாரத்தை ஏன் வெளியிடவில்லை? எப் 16 விமானத்தை பாகிஸ்தான் குவித்தது. அதில் ஒரு விமானத்தை இந்தியா வீழ்த்தி யதற்கான ஆதாரம் உள்ளது. அதை போல பாகிஸ்தான் காண்பிக்காதது ஏன்?
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பே பொறுப்பேற்றுவிட்டது. ஆனால் இல்லை என்கிறது பாகிஸ்தான். இதன் மூலம் அந்த அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்கி றதா? புதிய பாகிஸ்தான் உருவாகிவிட்டதாகக் கூறும் இம்ரான்கான் முதலில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் புதிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பு, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை நடத்தி வருவதும் அதன் தலைவன் மசூத் அசார் அங்கு வசிப்பதும் ஐநா பாதுகாப்பு அமைப்பில் உள்ளவர்களுக்குத் தெரியும்.
நிரவ் மோடி பற்றி கேட்கிறார்கள். அவர் லண்டனில் இருப்பது தெரியும். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது’’ என்றார்.