india pakistan tension pt
இந்தியா

அமெரிக்க அதிபரின் வர்த்தக நிபந்தனைதான் போர் நிறுத்தத்திற்கு காரணமா?

அமெரிக்க அதிபரின் வர்த்தக நிபந்தனையை ஏற்றுதான் பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

ஜெனிட்டா ரோஸ்லின்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா கடும் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு நாட்டின் எல்லையோர மாநிலங்களான காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானை பாகிஸ்தான் குறிவைத்தாலும், பெரும்பாலான முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

இந்நிலையில் இருநாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான அதிகாரிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் இருதரப்பிலும் எந்த தாக்குதலும் நடத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை இருதரப்பும் உறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின.

இதற்கிடையில், அமெரிக்க அதிபரின் வர்த்தக நிபந்தனையை ஏற்றுதான் பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையை இந்தியா நிறுத்தியதா? என்று எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பினர்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ’அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியவை குறித்து பிரதமர் மோடி எதுவும் கூறாமல் மெளனம் காத்துள்ளார். அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதா? .. பிரதமர் மோடியும், அவரது ஆதரவாளர்களும் இதற்கு பதில் அளிக்க வேண்டும். “ என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில்,

” போர் நிறுத்தத்திற்கும், வர்த்தகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?.. அதிபர் ட்ரம்ப் வெளியிடும் அறிக்கைகளால் பல்வேறு புதிய கேள்விகள் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்போவது யார்? “ என்றும் வினவியுள்ளார்.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இடையிலான தொலைபேசி உரையாடலின்போது, வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இடையிலான உரையாடலின்போதும் வர்த்தகம் தொடர்பாக பேசப்படவில்லை என கூறப்படுகிறது.