இந்தியா

புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!

புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!

EllusamyKarthik

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அதன் காரணத்தினால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக அரசு ஆணையிட்டிருந்தது. முன்னதாக இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதனை சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவித்திருந்தது புதுச்சேரி பள்ளி கல்வித்துறை. இந்த நிலையில் தான் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உண்டு என அறிவித்திருந்தார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். 

இது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பையும் குழப்பமடைய செய்துள்ளது. 

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை 

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் என நான்கு பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரிக்கென தனியாக கல்வி வாரியம் இல்லாத காரணத்தினால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழ்நாடு மாநில பள்ளி கல்வி வாரிய முறையை பின்பற்றியே பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. தேர்வுகள், மதிப்பெண் பட்டியல் என அனைத்தும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன (Affiliated). பொது தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு முடிவுகள், மதிப்பெண் பட்டியல் என அனைத்தும் தமிழகம் தான் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்துக்கு வழங்கி வருகிறது. 

அதே போல மாகேவுக்கு கேரளாவும், ஏனாமிற்கு ஆந்திராவும் உதவுகின்றன. இந்த நிலையில் தான் தமிழகத்தில் தற்போது 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்தது தமிழகத்திற்கு தான் என்றாலும் இது புதுச்சேரிக்கு தானாகவே பொருந்தும். 

இந்த நிலையில் தான் புதுச்சேரியில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உண்டு என செய்திகள் வெளிவந்தன. அது குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. அது தான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குழப்பமடைய செய்துள்ளது. 

“புதுச்சேரி மாநிலத்தில் தனி கல்வி வாரியம் இல்லாத நிலையில்,  தமிழக கல்வி வாரியத்தின் அடிப்படையில்  பாடத்திட்டங்கள் மற்றும் பொதுத் தேர்வை  நடத்தி வரும்  சூழ்நிலையில் , புதுச்சேரியில் எப்படி தனியாக  9,10,11 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியும் என்பதை புதுச்சேரி மாணவர்கள் பெற்றோர்களுக்கு  மேதகு துணைநிலை ஆளுநர், மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோர். வெளிப்படையாக விளக்கம் அளித்து அறிவிப்பை வெளியிட வேண்டும்” என புதுச்சேரி சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் விளக்கம் கேட்டுள்ளது. 

இது தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடுவிடம் பேசினோம் “புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களை பொறுத்தவரை தமிழ்நாடு கல்வி வாரியத்தை பின்பற்றி வருகிறோம். அதனால் அவர்கள் எடுக்கின்ற முடிவுகளை பொறுத்து தான் செயல்பாடு இருக்கும். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடுகின்ற நடைமுறையை தான் பின்பற்றுவோம்” என தெரிவித்தார். 

“புதுச்சேரியில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகளை நடத்துவது குறித்துப் பெற்றோர்கள், கல்வி நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்யப்படும்” என தற்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

-எல்லுச்சாமி கார்த்திக்